Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

TN State Board 12th Tamil Model Question Paper 5

நேரம்: 2.30 மணி 
மதிப்பெண்கள் : 90

குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
  • வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
  • வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
  • வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
  • வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.

பகுதி – I

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]

(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)

Question 1.
சங்க இலக்கிய மொழியின் அடையாளப் பண்பினை தொகைநிலை என்று எச்சவியலில் பேசும் இலக்கண நூல் _________.
(அ) நன்னூல்
(ஆ) தொல்காப்பியம்
(இ) வீரசோழியம்
(ஈ) தொன்னூல் விளக்கம் கலைவடிவம்
Answer
(ஆ) தொல்காப்பியம்

Question 2.
பொருளும் _______ யும் இணைந்துதான் கலைவடிவம் பெறுகின்றன.
(அ) ஓசை
(ஆ) பாவகை
(இ) இலக்கணம்
(ஈ) எழுத்தும்
Answer:
(அ) ஓசை

Question 3.
உலகச் சுற்றுச் சூழல் தினம் __________ ஆகும்.
(அ) மே 5
(ஆ) ஜுன் 5
(இ) ஜுலை
(ஈ) ஆகஸ்டு 5
Answer:
(ஆ) ஜுன் 5

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 4.
செவிலித்தாய் என்பவர் _________ ஆவார்.
(அ) பெற்றதாய்
(ஆ) பெற்றதாயின் தாய்
(இ) வளர்ப்புத்தாய்
(ஈ) தந்தையின் தாய்
Answer:
(இ) வளர்ப்புத்தாய்

Question 5.
சம்பந்தர் தேவாரத்தைத் தொகுத்தவர் _________.
(அ) திருமலை நம்பி
(ஆ) நம்மாழ்வார்
(இ) நம்பியாண்டார் நம்பி
(ஈ) குறுங்குடி நம்பி
Answer:
(இ) நம்பியாண்டார் நம்பி

Question 6.
‘விளியறி ஞமலி’ என்பதில் கூறப்பட்ட விலங்கு எது?
(அ) நாய்
(ஆ) பூனை
(இ) மாடு
(ஈ) மான்
Answer:
(அ) நாய்

Question 7.
கோவில்பட்டி வட்டார எழுத்திற்குக் கரிசல் இலக்கியம் எனப்பெயர் சூட்டியவர் ________ ஆவார்.
(அ) முகமது மீரான்
(ஆ) மு. மேத்தா
(இ) வைரமுத்து
(ஈ) கி. ராஜநாராயணன்
Answer:
(ஈ) கி. ராஜநாராயணன்

Question 8.
வினை, பயன், மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றுவது ___________ ஆகும்.
(அ) படிமம்
(ஆ) உவமம்
(இ) இறைச்சி
(ஈ) மரபு
Answer:
(அ) படிமம்

Question 9.
‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தைத் தயாரித்தவர் __________ ஆவார்.
(அ) சார்லி
(ஆ) சார்லஸ்
(இ) சார்லி சாப்ளின்
(ஈ) சார்லஸ் டிக்கன்ஸ்
Answer:
(இ) சார்லி சாப்ளின்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 10.
பொருத்துக.
அ) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
(ஆ) அரசு உவா – 2. மூங்கில்
(இ) கழஞ்சி – 3. இடக்கை வாத்தியம்
(ஈ) கழை – 4. எடை அளவு
(ஆ) 2, 1, 3, 4
(ஆ) 3, 1, 4, 2
(இ) 2, 4, 1, 3
(ஈ) 4, 3, 2,1
Answer:
(ஆ) 3, 1, 4, 2

Question 11.
தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர் __________ ஆவார்.
(அ) இளம்பூரணர்
(ஆ) நக்கீரர்
(இ) சாத்தனார்
(ஈ) பவணந்தியார்
Answer:
(அ) இளம்பூரணர்

Question 12.
ஆப்பிரிக்க ஆசியத் திரைப்பட விழாவில் சிவாஜிக்கு வழங்கப்பட்ட விருது __________ ஆகும்.
(அ) பத்மஸ்ரீ
(ஆ) பத்ம விபூலின்
(இ) செவாலியர்
(ஈ) கலைமாமணி
Answer:
(இ) செவாலியர்

Question 13.
‘காவ்யதரிசம்’ என்ற வடமொழி நூலைத் தழுவி இலக்கண நூலை இயற்றியவர் ___________.
(அ) பவணந்தி
(ஆ) அகத்தியர்
(இ) தொல்காப்பியர்
(ஈ) தண்டி
Answer:
(ஈ) தண்டி

Question 14.
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 - 1
Answer:
(இ) கலிவெண்பா – தூது

பகுதி – II

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 × 2 = 24]

பிரிவு – 1

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 15.
அணியிலக்கணத்தையும் சேர்ந்து கூறும் இலக்கண நூல்கள் யாவை?
Answer:

  • தொல்காப்பியம்
  • வீரசோழியம்
  • இலக்கண விளக்கம்
  • தொன்னூல் விளக்கம்
  • முத்துவீரியம்

Question 16.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
Answer:

  • வரக்கூடிய அனைத்துப் பிரச்சனைகளையும் வரவேற்று விருந்தோம்பல் செய்ய வேண்டும்.
  • துக்கங்கள் ஒரு கூட்டமாக வந்து துப்புரவாக வெறுமைப்படுத்தும் போதும், அவைகளையெல்லாம் நாம் எதிர்கொள்ளும் போது அவை உன்னைத் தூசிதட்டி, தயார்படுத்தி, உன்னைப் பலமிக்கவனாக மாற்றும்.
  • வக்கிரம், அவமானம், வஞ்சனை இவற்றையெல்லாம் வாயிலுக்கே சென்று இன்முகத்தோடு வரவேற்போமேயானால் எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் வலிமையும் நல்வழிகாட்டலும் கிடைக்கும்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 17.
தேவாரம் குறிப்பு வரைக.
Answer:

  • தேவாரம் = தே + வாரம் என்றும்
    தே + ஆரம் என்றும் பிரிக்கலாம்
  • தே + வாரம் என்றால் தெய்வத் தன்மையை உடைய இசைப் பாடல்கள்
  • தே + ஆரம் எனப்பிரித்தால் தெய்வத்திற்கு சூட்டப் பெற்ற பாமாலை என்று கூறுவர்.
  • சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் மூவர் தேவாரம் எனப்படும்.

Question 18.
புறநானூற்றில் குறிப்பிடப்பட்ட பல்வேறு பொருண்மைகளை எழுதுக.
Answer:

  • மூவேந்தர்
  • குறுநில மன்னர்
  • வேளிர்
  • மக்கள்
  • போர்ச்செய்திகள்
  • கையறு நிலை
  • நடுகல்

போன்றவற்றைப் பற்றி புறநானூறு குறிப்பிடுகிறது. கையைகாலாக

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக

Question 19.
கீழ்த்திசைச் சுவடிகள் குறித்து எழுதுக.
Answer:
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது.

Question 20.
‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
Answer:

  • “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது.
  • மரங்கள் இயற்கையின் கொடை இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம்.
  • பல வகையில், உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும்.
  • நிறைய மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும்.
  • மரங்கள் நம் நாட்டின் செல்வங்கள் என்பதனை உணர்ந்து இயற்கை வழியில் செல்வோம்! பசுமை பாரதத்தை உருவாக்குவோம்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 21.
கடலுக்கு வழங்கும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 - 2

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக.

Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) ஏகுவாய் (ஆ) ஈன்ற
Answer:
அ) ஏகுவாய் – ஏகு + வ் + ஆய்
ஏகு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

(ஆ) ஈன்ற = ஈன் + ற் + அ
ஈன் – பகுதி
ற் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக் குறிப்புத் தருக.
(அ) மாதவம்
(ஆ) நுந்தை
Answer:
(அ) மாதவம் = உரிச்சொற்றொடர்
(ஆ) நுந்தை = நும்தந்தை என்பதன் மரூஉ

Question 24.
மரபுப் பிழை நீக்குக.
சிங்கம் பிளிற யானை கர்ஜித்தது
Answer:
யானை பிளிற சிங்கம் முழங்கியது.

Question 25.
ஏதேனும் ஒன்றிற்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) செல்லிடத்து
(ஆ) வெண்மதி
Answer:
(அ) செல்லிடத்து = செல் + இடத்து
செல் + ல் + இடத்து = செல்லிடத்து

விதிகள் :

  1. தனிக் குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
  2. உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே.

(ஆ) வெண்மதி = வெண்மை + மதி
வெண் + மதி = வெண்மதி
விதி : ஈறுபோதல்

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 26.
தனித்தமிழில் எழுதுக.
சீரியல் பார்க்காத லைப் போரடிக்குது என்றார் சீனியர் சிட்டிசன்.
Answer:
தொலைக்காட்சித் தொடர் பார்க்காத வாழ்க்கை வெறுப்பாக உள்ளது என்றார் மூத்த குடிமகன்.

Question 27.
விடைக்கேற்ற வினா எழுதுக.
நாங்கள் இந்த ஆண்டு சுற்றுலாவுக்கு புதுதில்லி சென்று வந்தோம்.
Answer:
நீங்கள் இந்த ஆண்டு சுற்றுலாவுக்கு எங்கே சென்று வந்தீர்கள்?

Question 28.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வெளிப்படுமாறு ஒரே தொடரில் விடையளி.
மாரி – மாறி
Answer:
மும்மாரிப் பொழிந்த தமிழகத்தில் இந்நாட்களில் மாரி மாறிப் பொழிகிறது.

Question 29.
தேவையற்ற இடங்களில் வல்லின மெய் நீக்கி எழுதுக.
வந்தச்சொல்லே மீண்டும் மீண்டும் வந்துப் பொருள் தந்தால் அதுவும் அதேப் பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வரு நிலை அணியாம்.
Answer:
வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து பொருள் தந்தால். அதுவும் அதே பொருளைத் தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலை அணியாம்.

Question 30.
LASER என்ற கலைச்சொல்லின் தமிழாக்கம் தருக.
Answer:
சீரொளி

பகுதி – III

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 × 4 = 28]

பிரிவு – 1

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக

Question 31.
வரிவிதிப்பில் அரசன் எவ்வாறு செயல்பட வேண்டும் எனப் பிசிராந்தையார் விவரிக்கிறார்?
Answer:

  • ஒரு மாவிற்கும் குறைந்த நிலமாயினும் அதன்கண் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்களுக்கு உணவாகும்.
  • நூறு மடங்கு பெரிய வயலாக இருந்தாலும் யானை தனித்துச் சென்று வயலில் புகுந்து உண்ணுமாயின் அதன் வாயில் புகுந்த நெல்லைவிட அதன் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.
  • அதுபோல அறிவுடைய அரசன், வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு, கோடிக் கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
  • அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக, குடிமக்களின் அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்புவது. யானை தான் புகுந்த நிலத்தில் தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது.
  • அரசன் தானும் பயனடைய மாட்டான்; நாட்டு மக்களும் துன்புறுவர்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 32.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:

  • அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே.
  • குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே, அம்மணிகளுள் அருள்நிறைந்த சைவமணியே.
  • ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.
  • உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • பெருமை சான்ற நினது புகழையே நான் பேச வேண்டும்.
  • பொய் பேசாதிருக்க வேண்டும்.
  • சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்றுமாறு எனக்கு அருள வேண்டும்.
  • மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும்.
  • துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.
  • என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும். மதியும் நின் கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும்.
  • ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே, இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக என்று கந்தவேளிடம் வள்ளலார் வேண்டுகிறார்.

Question 33.
அதியமான் அவையில் ஒளவையார் செய்த செயலைப் புறநானூறு பாடல்வழி நிறுவுக.
Answer:

  • தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையவர்கள் புலவர்கள்.
  • அதே வேளையில் அவ்வள்ளல்கள் பற்றித் தாம் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டுமே என நினைந்து வருந்தும் தன்மையைக் கொண்டவர்கள்.
  • பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே!விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
  • இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
  • இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை
  • ஆகவே, எம் யாழினை எடுத்துக்கொண்டோம். கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம்.
  • மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்? அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல்
    கிட்டும். இவையே புறநானூறு பாடலில் ஔவை கூறிய கருத்தாகும்.

Question 34.
இராமன் இலங்கை அரசை யாருக்கு உரிமையாக்கிக் கொடுத்தான்?
Answer:

  • இராவணன் சீதையை கவர்ந்து வந்தது தவறு என்று கூறி இலங்கையை விட்டுவந்தவன் வீடணன். இராமன் இருக்குமிடம் வந்து அடைக்கலம் வேண்டினான்.
  • இராமன் அவனை உடன் பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசை அவனுக்கே உரிமையாக்கினான்.
  • இலங்கை அரசாட்சி, ஏழேழாகிய பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன் என்று இராமன் கூறினான்.

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.

Question 35.
தாய முறை (Matrilocal) என்றால் என்ன?
Answer:

  • சங்க காலத்தில் பெண்கள் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் முறையே “தாய முறை” எனப்படும்.
  • திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக சங்க காலத்தில் இருந்துள்ளது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 36.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பன:

  • இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டவை.
  • 8 ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறை கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின.
  • 1715 இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’ ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும்.
  • 19 ஆம் நூற்றாண்டில் பள்ளிகள் பெருகின.
  • 1812 இல் உருவான சென்னை கோட்டைக் கல்லூரி.
  • 1837 இல் தொடங்கப்பட்ட கிறித்துவக் கல்லூரி.
  • 1840 இல் உருவான பிரசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் சென்னையில் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.

Question 37.
வெ. இறையன்பு பற்றிக் குறிப்பு எழுதுக.
Answer:

  • வெ. இறையன்பு என்பவர் ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்னும் நூலை எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், இ. ஆ. ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்.
  • 1990 ஆம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்து வருபவர்.
  • தமிழ் இலக்கியப் பற்றுடைய இவர், தமிழில் வாய்க்கால் மீன்கள், ஐ. ஏ. எஸ். வெற்றிப் படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
  • பட்டிமன்றங்களில் நடுவராகப் பங்கேற்பதுடன் பல்வகைப்பட்ட ஊடகங்களில் பங்களிப்பைச் செய்து வருபவர்.
  • இவர் எழுதிய வாய்க்கால் மீன்கள்’ என்னும் கவிதை நூல், 1995 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது.
  • சிறுகதை, புதினம், தன் முன்னேற்ற நூல், நம்பிக்கை நூல் என இவர் படைப்புக்களம் விரிவானது.

Question 38.
சாப்ளின் உருவாக்கிய ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்னும் கதையைப் பற்றி விளக்குக.
Answer:

  • கதையில் ஹிட்லரை உருவகப்படுத்தி ஹென்கோல் என்னும் கதைப்பாத்திரத்தை சாப்ளின் உருவாக்கினார். அதே உருவம் கொண்ட இன்னொரு பாத்திரத்தைக் கடை நடத்தி வரும் யூத இனத்தைச் சார்ந்தவராக அறிமுகப்படுத்தினார்.
  • சர்வாதிகாரி ஹென்கோல், யூதர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுகிறார். காவலர்களும், யூதரான கடைக்காரரைக் கைதுசெய்து சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
  • சிறையிலிருந்து தப்பிக்கும் கடைக்காரர், வழியில் ஹென்கோலின் உடையைத் திருடி அணிந்து கொள்கிறார்.
  • அப்போது வழியில் வரும் ஹென்கோலின் படைவீரர்கள் இவர்தான் ஹென்கோல் என தவறாக நினைத்து மரியாதை செய்கின்றனர்.
  • அதேசமயம் தப்பித்த கைதியைத் தேடி வந்த காவலர்கள் சாதாரண உடையில் வந்த ஹென்கோலை, தப்பித்த குற்றவாளி என நினைத்துக் கைது செய்கின்றனர். ஹென்கோல் சிறைக் கைதியாகிறார்.
  • ஒரே நாளில் இருவர் வாழ்க்கையும் தலைகீழாக மாறுகிறது.
  • அதன்பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் கடுமையான அரசியல் விமரிசனங்கள். இறுதிக்காட்சியில் சர்வாதிகாரி வேடத்தில் இருக்கும் யூதர் கைது செய்யப்பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்யச் சொல்லி ஆணையிடுகிறார்.
  • மாநாட்டில் மனிதகுல விடுதலை குறித்துப் பேருரை ஆற்றுகிறார்.
  • அந்தப் பேருரைதான் இன்றுவரை திரைப்படங்களின் மிகச் சிறந்த வசனமாகப் போற்றப்படுகிறது.
  • வாழும் காலத்திலேயே ஹிட்லரைக் கடுமையாக விமர்சித்து எடுத்த ஒரே படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு.
  • அதுபோல இரட்டை வேடப்படங்கள் எவ்வளவோ வந்தாலும் அதில் மிகச் சிறந்த திரைப்படம் என்ற பெயரும் இதற்கு உண்டு.

பிரிவு – 3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.

Question 39.
மருதத் திணை அல்லது பாடாண் திணையை விளக்கி எழுதுக.
Answer:
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று மருதத்திணை.
முதற்பொருள்
நிலம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – காலை
பெரும்பொழுது – ஆறு பெரும்பொழுதுகள்

கருப்பொருள் :
தெய்வம் – வேந்தன்
மக்கள் – உழவர், உழத்தியர்
மரம் – மருதம், காஞ்சி
பறவை – நாரை, அன்னம்
உணவு – செந்நெல், வெண்ணெய்
தொழில் – நெல்லரிதல், களை பறித்தல்

உரிப்பொருள்: ஊடலும் ஊடல் நிமித்தமும்.

(அல்ல து)

பாடாண் திணையைச் சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
ஒரு மன்னனது புகழ், வலிமை, வள்ளன்மை அருள் முதலியவற்றை ஆய்ந்து கூறுவது பாடாண்திணையாகும். பாடப்படுகின்ற ஆண்மகனது ஒழுகலாற்றைக் கூறுவது இத்திணையின் நோக்கமாகும்.

(சான்று) அறுகுளத் துகுத்து மகல்வயிற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் – பரணர்

திணைப் பொருத்தம் :
மழையானது நீர் வற்றிய குளத்திலும், அகன்ற விளை நிலத்திலும் பெய்யும். அவ்வாறு பெய்யத்தக்க குளத்திலும் விளைநிலத்திலும் பெய்யாது. பயன்படாத களர் நிலத்திலும் மிகுதியாய் பெய்யும் முறைமையை உடையது. அதுபோல மத மிகுந்த யானையினை உடைய காலில் வீரக் கழல் அணிந்த பேகன் இரவலர்க்கு வரையறையின்றிக் கொடுத்தலில் அறியாமை உள்ளவனாய் இருப்பான். ஆனால் பிறர் படை வந்து கலந்து போரிட்டால் அப்படையினரிடம் தான் அறியாமை இல்லாதவனாய் இருப்பான். பேகனின் படை, கொடை இப்பாடலில் கூறியமையால் பாடாண் திணையாயிற்று.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 40.
உவமையணி அல்லது மடக்கணியை விளக்கி எழுதுக.
Answer:
அணி விளக்கம்:
இரண்டு பொருள்களுக்கு ஒப்புமை தோன்றச் சொல்வது உவமையணி ‘ யாகும். இது தாயணி’ என்று கூறப்படும். ஏனெனில் இந்த அணியிலிருந்தே மற்ற அணிகள் தோன்றின.

(எ.கா.) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

விளக்கம்
சேற்று நிலத்தில் வழுக்கி விழாமல் இருக்க ஊன்றுகோல் எங்ஙனம் உதவுகிறதோ, அதுபோல நாம் துன்பப்படும் வேளையில் பெரியோர்களின் வாய்ச்சொற்கள் ஊன்றுகோலாக இருந்து நம்மைக் காப்பாற்றும்.

(அல்லது)

மடக்கணி:
Answer:
அணி விளக்கம்:
ஒரு சொற்றொடர் மீண்டும் வந்து வேறு பொருள் தருவது ‘மடக்கணி’ எனப்படும்.
(எ.கா.) ‘அரிவையம்பாகத்தான்’

விளக்கம் :
இச்சொல், அரி + வை + அம்பு + ஆக = திருமால்
கூர்மையான அம்பாக விளங்க, என்னும் பொருளைத் தருகிறது. இதே சொல்லை,
அரிவை + அம் + பாகத்தான் எனப் பிரித்தால், பார்வதி தேவியை அழகிய ஒரு பாகத்தில் உடையவன் சிவபெருமான், என வேறு பொருள் தருகிறது. ஒரே சொற்றொடர் இரு வேறு பொருள் தருகிறது. எனவே, இது ‘மடக்கணி’ எனப்படும்.

Question 41.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி எழுதுக.
Answer:
பழமொழி விளக்கம்: நமக்கு உதவி செய்தவரை நம் உயிர் உள்ளவரை நாம் மறக்கக் கூடாது.

வாழ்க்கை நிகழ்வு:
கல்லூரியில் பயிலும் வேலனும் கந்தனும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வேலன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கந்தன் தன் நண்பனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தான். ஒருமுறை, கல்லூரியில் தேர்வு தினம் அறிவிக்கப்பட்டது. அனைவரும் அவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர். வேலனோ எவ்வளவு முயன்றும் அவனால் தன் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை.

பணம் செலுத்தாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்னும் இக்கட்டான நிலையில் கந்தன் அவனது கட்டணத்தைக் கட்டி உதவினான். இவ்வாறு பல உதவிகளைக் கந்தன் செய்தான். வேலன், ‘இந்த உதவிகளுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?’ என்று அடிக்கடி கூறுவான். ஒருநாள் கல்லூரிக்கு வரும்பாதையில் கந்தனுக்கு விபத்து ஏற்பட்டது. அவன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதை அறிந்த வேலன் மருத்துவமனைக்கு விரைந்தான்.

தன் நண்பனின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றான் வேலன். மருத்துவர் அவனிடம் கந்தனுக்கு இரத்தப் பிரிவும் அவனுடைய இரத்தப் பிரிவும் ஒன்று என்பதால் வேலன் தன் உதிரத்தைக் கொடுத்து தன் நண்பனைக் காப்பாற்றினான்.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 42.
தமிழாக்கம் தருக.
1. A guilty conscience needs to accuser.
2. Slow and steady win the race.
3. Do not add fuel to the flame.
4. Honesty is the best policy.
Answer:
1. குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
2. நிதானம் பிரதானம்.
3. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே.
4. நேர்மையே சிறந்த கொள்கை.

Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
தூய்மை இந்தியா (அல்லது) புதிய பாரதம்
Answer:
Tamil Nadu 12th Tamil Model Question Paper 5 - 3

(அல்லது)

புதிய பாரதம்
Answer:
புதிய பாரதம் படைத்திடுவோம்
புதிது புதிதாய்ப் படைத்திடுவோம்
பகையில்லா நட்புடனே பழகிடுவோம்
சாதிமத பேதங்கள் தவிர்த்திடுவோம்
சகலருக்கும் நீதியும் சமம்செய்வோம்
சரிநிகராய்ப் பெண்களுக்கு இடமளிப்போம்
சாலையின் விதிகளைக் கடைப்பிடிப்போம்
சத்தமின்றி சட்டமின்றி புதுமையெல்லாம்
சமத்துவமாய் புதிய பாரதம் செதுக்கிடுவோம்

பகுதி – IV

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3 × 6 = 18]

Question 44.
(அ) சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் – இக்கூற்றை முப்பால் வழி
விரித்துரைக்க.
Answer:
சினம் கொண்டால் தீமையான விளைவுகள் உண்டாகும். தன்னையும் தன்னை சார்ந்து உள்ளவர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து திரும்ப பெற முடியாத நிலையினை சினம் உண்டாக்கிவிடும். எனவே சினத்தை எப்பொழுதும் கைவிட வேண்டும். சினத்தைக் காத்தால் நம் வாழ்வு மேம்படும் என்பது பற்றி காண்போம்.

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

நம்முடைய சினத்தை நம்மைவிட வலியவரிடத்தில் காட்டினால் என்ன நடக்கும். பாதிப்பு நமக்கே அதிகமாக இருக்கும். எனவே சினத்தை மெலியவரிடத்திலும், வலியவரிடத்திலும் காத்து கொள்ள வேண்டும்.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனான் வரும்.

தீமையான விளைவுகள் அனைத்தும் சினத்தாலேயே ஏற்படும். எனவே யாரிடத்திலும் சினம் கொள்ள நினைக்கக் கூடாது.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?

நம் முகத்தில் உள்ள மகிழ்ச்சியையும், அகத்தில் உள்ள மகிழ்ச்சியையும் அழிப்பது நம் சினமே. எனவே அதைக் கைவிட வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும். அப்படிக் காக்காவிடில் சினமே நம்மை அழித்துவிடும்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

சினம் தன்னையும் அழிக்கும், தன்னைப் பாதுகாக்கும் நம் உறவுகளையும் சுட்டழித்துவிடும். எனவே சினத்தை முழுமையாகக் கைவிட்டு நம் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

(அல்லது)

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 44.
(ஆ) எச். ஏ. கிருட்டிணனார் ‘கிறித்தவக் கம்பரே’ என்பதை நும் பாடப்பகுதி வழி நிறுவுக.
Answer:

  • கிறித்துவக் கம்பர் என்ற ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (H.A. கிருஷ்ணபிள்ளை ) ஏப்ரல் 23, 1827 ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பில் ரெட்டியார் பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் சங்கர நாராயண பிள்ளை, தெய்வ நாயகியம்மை. ஹென்றி ஆல்பிரடு என்ற
    பெயர்களின் சுருக்கமே H.A. ஆகும்.
  • தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை இவர் எழுதியதாகச் சொல்லப்படும் இரட்சணிய குரல், இரட்சணிய பாலா போதனை என்ற நூல்கள் தற்பொழுது கிடைக்கவில்லை.
  • இரட்சணிய மனோகரத்தின் பெரும் பகுதி இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது ஆகும்.
  • H.A.கிருஷ்ணபிள்ளை தென்தமிழ் நாடாகிய நெல்லை நாடு, தற்போதைய (திருநெல்வேலி மாவட்டம்) பல மேலை நாட்டு அறிஞர்களை தமிழ்த் தொண்டராக்கிய பெருமை இவரைக் சேரும்
  • இத்தாலிய தேசத்து வித்தகராகிய வீரமாமுனிவரது தமிழ்ப் புலமைக்கு அடிகோலியது நெல்லை நாடும், இவரும் தான். பெருந்தமிழ் தொண்டராகிய போப்பையருக்குத் தமிழ் அறிவு ஊட்டியது நெல்லை நாடு தான்.
  • மொழி நூற்புலமையில் சிறந்து விளங்கிய கால்டுவெல் ஐயர் வாழ்ந்ததும் நெல்லை நாடு தான். இவ்வாறு பிற நாட்டு அறிஞரைப் தமிழ்ப் பணியில் ஈடுபடுத்திய தென்தமிழ் நாட்டில் ரெட்டியார்பட்டி என்ற சிற்றூர் உள்ளது.
  • அந்த ஊரில் வேளாளர் குலத்தில் வைணவ மதத்தில் பிறந்தவர் தான் H.A. கிருஷ்ணபிள்ளை . இளமையிலே தமிழில் உள்ள நீதி நூல்களையும், சமய நூல்களையும் அக்கால முறைப்படி நன்கு கற்றார்.
  • அப்போது நெல்லை நாட்டிலே கிறிஸ்துவ சங்கங்கள் கிளர்ந்து எழுந்தன. சிறந்த சமயத் தொண்டும் செய்யப்பட்டது. சர்ச்சு முறைச் சங்கத்தில் சிறப்பாக சார்சந்தர் என்னும் சிலர் சிறந்த பணி செய்தனர்.

அதன் காரணமாக கிறித்துவனமதத்தின் மீது H.A. கிருட்டிணபிள்ளைக்கு அதிக ஈடுபாடு வந்தது. அந்த மதம் தொடர்பான பல நூல்கள் இவரால் எழுதப்பட்டது.
போற்றித் திருஅகவல்

  • இரட்சணிய யாத்திரிகம்
  • இரட்சணிய மனோகரம்
  • இரட்சணிய குரல்
  • இரட்சணிய பாலா

போன்ற கிறித்துவ தொடர்பான பல படைப்புகள் இவரால் எழுதப்பட்டது. இதன் காரணமாகவே கிறித்துவக் கம்பர் என்று அழைக்கப்படுகிறார்.

Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன் கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:

  • ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
  • அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
  • இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.

தொடக்ககால ஆய்வுகள்:

  • 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
  • அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
  • தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு காரணமாக, பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும் ‘ ஆகிய நூல்களை அவர் இயற்றினார்.
  • சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு. மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
  • குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். வட்டெழுத்து, கோலெழுத்து, தமிழ் பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
  • வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.

வரலாற்று ஆய்வு:

  • மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார்.
  • தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
  • சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
  • சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
  • இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.

கலையியல் ஆய்வு:

  • கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
  • தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
  • இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம். நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும்.
  • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.

கல்வெட்டு ஆய்வுகள்:

  • சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
  • ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
  • தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.

பன்மொழிப் புலமை:

  • தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும். வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
  • மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
  • தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி. அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.

ஆராய்ச்சிப் பேரறிஞர்:

  • மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
  • பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.

முடிவுரை:

  • தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
  • மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
  • தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

(அல்லது)

Question 45.
(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:

  • குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
  • குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.

குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.

வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.

மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.

தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்

முதலான தொடர்களில் ‘இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.

சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.

தந்தைவழிக் குடும்பம் :
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.

தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.

விரிந்த குடும்பம் :
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.

இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.

Tamil Nadu 12th Tamil Model Question Paper 5

Question 46.
(அ) தோப்பில் முகமது மீரான் எழுதிய தலைக்குளம் கதையை கருப்பொருள் மாறாமல் எழுதுக.
Answer:
சிங்காரச் சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் தன் பிள்ளைகளோடு, வேண்டா வெறுப்பாக ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார்.

ஊரில் பழைய ஒரு ஓட்டு வீடும், சுத்தமான தண்ணீர் கிடைக்கும் வறண்டே போகாத கிணறும் சும்மா கிடக்குடா, அங்கே போய்த் தங்குவோம்? என பெரியவர் கேட்கும் போது – அவரது பிள்ளைகள் அதைக் காதில் வாங்கிக் கொள்வதுமில்லை. அவரது எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதும் இல்லை.

மாறாக. சொந்த ஊர்ல யாரையும் எங்களுக்குத் தெரியாது கிணற்று நீரைவிட மினரல் வாட்டர்தான் உயர்வானது என்றும் பிள்ளைகள் வாப்பாவிடம் பதிலுக்குக் கூறியதுண்டு.

பெரியவர் ‘நான் பிறந்த மண்ணுடா, என்னோட அப்பன் வச்ச வீடுடா, அது அங்கே சும்மா கிடக்குடா.. அந்தத் தண்ணீர் குடிச்சித்தான் நானே வளர்ந்திருக்கேன் என்றார். அத வித்திடுங்க வாப்பா, இந்த நாகரீக காலத்துல ஓடு போட்ட மர வீட்ல யாரு தங்குவா? என பிள்ளைகள் ஏளனம் செய்வதைக் கேட்கக் பரிதாபமாக இருந்தது.

பெரியவர் தன் வீட்டைப் பற்றியும், தலைக்குளம் கிராமத்தைப் பற்றியும் எவ்வளவு உயர்வாகப் பேசினாலும், அவரது பிள்ளைகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அவர்கள் பெரியவரின் பேச்சைக் காதால் கேட்கக்கூடத் தயாராக இல்லை.

தலைக்குளத்தின் கதைகள், கன்னியார் கோண ஏலாவைப் பற்றிய கதைகள், ஞானியார் நீரோடை, புன்னமூட்டடி இதைப் பற்றியெல்லாம் பெரியவர் சொன்னாலும் பிள்ளைகள் அறிய விரும்புவதில்லை. வேகாத வெயிலில் மொட்டை மாடியில் காற்றுவாங்கும் நகரத்து நரக வேதனையை அனுபவிக்கும்போது, பெரியவர் தனது கிராமத்தின் வயல்வெளியில் வீசும் தலைக்குளத்துக் குளிர்காற்றை அனுபவித்ததை எண்ணிப் பார்க்க மறக்கவில்லை.

கிராமத்து இயற்கையை ரசிக்கத் தெரியாத தலைமுறையாக நமது பிள்ளைகள் ஆகிவிட்டனரே என்று பெரியவர் கவலை கொண்டார். ஒரு நாள் மூத்த மகன் பெரியவரிடம், வாப்பா நம்ம தலைக்குளத்து ஓட்டு வீடு இனி வேண்டாம். நல்ல விலைக்கு வித்திடுங்க வாப்பா. இனிமே நாங்க யாரும் அங்கே போய் இருக்கப்போறது இல்லை. உன்னையும் அங்கே தங்கவிடப் போறதில்லை. அதனை பேப்பர்ல விளம்பரம் போடுங்க… வீட்டை நல்ல விலைக்கு வித்திடுங்க.

ஓடு வேய்ந்த வீடு… நாலு கட்டு வீடு – ஈட்டி மரம் – எந்த வறட்சியிலும் வற்றாத கிணறு, ருசிமிகுந்த தண்ணீர் – பக்கத்தில் எப்போதும் தண்ணீர் ஓடும் வாய்க்கால் – வீடு விற்பனைக்கு – அணுகவும் என்று மூத்த மகன் பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தான்.

விளம்பரத்தைக் கண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் வீட்டை வாங்கும் எண்ணத்தில் பெரியவரை அணுகியிருந்தார். ஓய்வுக்காலத்தைக் கிராமத்தில் கழிக்க எண்ணியிருந்த நீதிபதியை அழைத்துக் கொண்டு தலைக்குளம் பற்றியும், புன்னமூட்டி குளிர்ச்சி, புன்னப்பூ வாசம், தாழை வாசம் என பயணத்தின் போது பெரியவர் சொல்லச் சொல்ல; நீதிபதி வீட்டை உடனே விலைபேசி வாங்கும் நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.

பெரியவர், முன்னாள் நீதிபதியை அழைத்துச் சென்றார். நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த தனது வீட்டைத் திறந்துகாட்டினார். அடைபட்ட வீட்டிலிருந்து வௌவால்கள் சத்தமிட்டபடி அங்குமிங்கும் பறந்தன. வீட்டினுள் பழமைநெடி மூக்கைத் துளைத்தது. மூக்கைப் பொத்தியபடியே நீதிபதி வீட்டைப்பார்த்தார். அவருக்கு வீட்டின் அமைப்புமுறை மிகவும் பிடித்திருந்தது. பெரியவர் பின்பக்க கதவைத் திறந்தார். இருவரும் கிணற்றுப் பக்கம் சென்றார். நீதிபதிதான் முதலில் கிணற்றை எட்டிப் பார்த்தார். கிணற்றுக்குள் வறண்ட பூமியின் வெடிப்பைக் கண்டார். உடனே மனம் மாறினார். வீடு வேண்டாமென்று கூறிவிட்டுத் தனது காரில் கிளம்பத் தயாரானார். உடன் வருமாறு பெரியவரை அழைத்தும் வராததால் நீதிபதி சென்றுவிட்டார்.

பெரியவர் தனது ஊரின் மீதுள்ள ஆசை மிகுதியால் தலைக்குளத்துத் தண்ணீரில் மூழ்க ஆசையோடு தலைக்குளம் நோக்கி நடந்தார். அங்கே குளம் இருந்த சுவடே மறைந்து போயிருந்தது. குளம் இருந்த இடத்திலும், கன்னியார்கோணம் ஏலா, அரசகுளம் ஆகிய எல்லா இடங்களிலும் புதிய புதிய குடியிருப்புகள்.

பெரியவருக்குத் தலைசுற்றியது. நீர்ப்பிடிப்புப் பகுதியெல்லாம் குடியிருப்புகள் ஆனதினால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போகுமே என ஏக்கப் பெருமூச்சு விட்டபடி, தன்மகன் வாழும் நகரத்தை நோக்கிப் பயணப்பட்டார் பெரியவர்.

(அல்லது)

Question 46.
(ஆ) சங்ககால வரலாற்றை அறிந்து கொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது – விளக்குக.
Answer:
புகளூர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஆறுநாட்டான் என்று ஒரு மலை உள்ளது. மலையடி வாரத்து ஊரை வேலாயுதம்பாளையம் என்பர். இம்மலைப்பகுதியில் இக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மொத்தம் 12 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் சங்ககாலத் தமிழ் எழுத்தில் எழுதப் பெற்றுள்ள மொழி தமிழாகும். இவற்றுள் இரு கல்வெட்டுகள் சேர மன்னர்கள் வழங்கிய கொடை பற்றிக் கூறுகின்றன. எனவே, இக்கல்வெட்டுகள் சங்க வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் துணைபுரிகின்றன.

கல்வெட்டு -1
மூதா அமண்ணன் யாற்றூர்
செங்காயபன் உறைய்
ஆதன் செல்லிரும் பொறை மகன்
பெருங்கடுங்கோன் மகன் (இளங்
கடுங்கோ (இளங்கோ ஆக அறுத்த கல்

யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேர மன்னர் செல்லிரும் பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை. சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்தப் பெற்றுள்ளனர்.

கல்வெட்டு -2, 3
யாற்றூர் செங்காயப்பன்
(தா)வன் பின்னம் கொற்றன்
அறுபித்த அதிட்டானம்

யாற்றூரில் செங்காயபனுக்குத் தாவன் பின்னன் கொற்றன் என்பவர் அதிட்டானம் கொடுத்தது பற்றிக் கூறுகிறது. அதிட்டானம் என்றால் தரைப்பகுதி என்று பொருள்.

கல்வெட்டு – 4
நலிய்) ஊர் பிடன் குறும்மகள்கீரள்
கொற்றி செய்பிதபளி

நலி ஊரை சேர்ந்த பிடனுடைய இள மகளான கீரன் கொற்றி செய்பித்த பாளியைப் பற்றி கூறுகிறது.

கல்வெட்டு – 5
நலி(ய்) ஊர் பிடந்தை மகள் கீரன்
கொறி அதிட்டான்

நலி ஊரை சேர்ந்த பிடந்தையின் மகளான கீரன் கொற்றி கொடுத்த படுக்கை. மேற்கண்டவாறு மொத்தம் 10 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் தமிழின் தமிழரின் பெருமையையும் அரசனின் பெருமையையும் எடுத்தியம்புகின்றன.

சிறப்புகள் :

  • சங்ககால சேர அரசர்களின் கல்வெட்டு.
  • கோ ஆதன் செல்லிரும் பொறை பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகிய அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப் பெற்றுள்ளன.
  • சேர அரசின் மூன்று தலைமுறை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
  • பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்குரிய தலைவர்களாக அடையாளப்படுத்த பெற்றுள்ளனர்.

பகுதி – V

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 × 4 = 4]

Question 47.
(அ) ‘அறிவும்’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடல்.
Answer:
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே. – ஒளவையார்

(ஆ) ‘வையத்துள்’ என்று துவங்கும் திருக்குறளை எழுதுக. [1x 2 = 2]
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் – தெய்வத்துள் வைக்கப் படும்.
– திருவள்ளுவர்