Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 4 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.
TN State Board 12th Tamil Model Question Paper 4
நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90
குறிப்புகள்:
- இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
- வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். - வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
- வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
- வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
- வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.
பகுதி – I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 × 1 = 14]
(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)
Question 1.
சாபவிமோசனம், அகலிகை கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்திய எழுத்தாளர்…………………
(அ) டாக்டர் உதயமூர்த்தி
(ஆ) கல்கி
(இ) புதுமைப்பித்தன்
(ஈ) புலமைப்பித்தன்
Answer:
(இ) புதுமைப்பித்தன்
Question 2.
‘முருகு உறழ் முன்பொடு’ என்ற தொன்மம் விளக்கும் பாடல் …………… நூலில் இடம் பெற்றுள்ளது. (அ) நற்றிணை
(ஆ) நல்ல குறுந்தொகை
(இ) நன்னூல்
(ஈ) தண்டியலங்காரம்
Answer:
(அ) நற்றிணை
Question 3.
பல சிற்றுறுப்புகளின் தொகுதியாக உள்ள பேருறுப்பைக் குறிப்பது ………………….
(அ) காதை
(ஆ) சருக்கம்
(இ) காண்டம்
(ஈ) படலம்
Answer:
(இ) காண்டம்
Question 4.
வள்ளலார் சமரச சன்மார்க்க சபையை நிறுவிய இடம். ………….
(அ) வண்டலூர்
(ஆ) வடக்கூர்
(இ) வண்டியூர்
(ஈ) வடலூர்
Answer:
(ஈ) வடலூர்
Question 5.
…………… ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி சென்னை நகரின் மக்கட்தொகை 1900
ஆகும்.
(அ) 1646
(ஆ) 1746
(இ) 1846
(ஈ) 1846
Answer:
(அ) 1646
Question 6.
ஓதற்பிரிவிற்கு உரிய காலம் ………… ஆண்டுகள்.
(அ) இரண்டு
(ஆ) மூன்று
(இ) நான்கு
(ஈ) ஐந்து
Answer:
(ஆ) மூன்று
Question 7.
கவிஞர் நகுலனின் இயற்பெயர் ……….
(அ) பாலசந்திரன்
(ஆ) இந்திரன்
(இ) சாமிக்கண்ணு
(ஈ) துரைச்சாமி
Answer:
(ஈ) துரைச்சாமி
Question 8.
………….. நூலுக்கு இளம்பூரணர்தான் முழுமையான உரை தந்துள்ளார்.
(அ) தொல்காப்பியம்
(ஆ) நன்னூல்
(இ) மாறனலங்காரம்
(ஈ) தண்டியலங்காரம்
Answer:
(அ) தொல்காப்பியம்
Question 9.
தமிழ்ச் சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து………………… வருபவர் ….
(அ) தாராபாரதி
(ஆ) பக்தவத்சல பாரதி
(இ) பாரதி சண்முகம்
(ஈ) சுத்தானந்த பாரதி
Answer:
(ஆ) பக்தவத்சல பாரதி
Question 10.
‘கூடி வாழ்தல்’ என்ற பொருளில் வருவது……………………
(அ) குடும்பு
ஆ) கடும்பு
(இ) குடம்பை
(ஈ) கடம்பை
Answer:
(அ) குடும்பு
Question 11.
தேடலை விரிவாக்குவது என்பர்…………………
(அ) புகழ்
(ஆ) செல்வம்
(இ) கல்வி
(ஈ) உறவு
Answer:
(இ) கல்வி
Question 12.
அகநானூற்றின் களிற்றியானை நிரையில் உள்ள பாடலின் எண்ணிக்கை ………….. ஆகும்.
(அ) 100
(ஆ) 120
(இ) 180
(ஈ) 110
Answer:
(ஆ) 120
Question 13.
புனவன் என்பது……………………….. ஐக் குறித்தது.
(அ) மீனவன்
(ஆ) பாடகன்
(இ) நூலகன்
(ஈ) கானவன்
Answer:
(ஈ) கானவன்
Question 14.
ஓட்டுநர் உரிமம் இன்றி ஊர்தியை இயக்கினால் சிறைத்தண்டனையோ அல்லது……… அபராதமோ
விதிக்கப்படும்.
(அ) ரூ. 2000
(ஆ) ரூ. 3000
(இ) ரூ. 40000
(ஈ) ரூ. 5000
Answer:
(ஈ) ரூ. 5000
பகுதி – II
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.[12 x 2 = 24]
பிரிவு – 1
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
Question 15.
வாகைத் திணை என்றால் என்ன?
Answer:
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி
வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணையாகும்.
Question 16.
நும் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அகநானூற்று பாடலில் உள்ளுறைப் பொருளை எழுதுக.
Answer:
- வண்டியை இழுக்கும் எருதுகளின் துன்பத்தைத் தந்தை போக்கியது.
- தலைவியைக் கண்டதனால் எனக்கேற்பட்ட துன்பத்தை நீ போக்குதற்கு உரியவன் என்று தலைவன் பாங்கனிடம் உள்ளுறுத்துக் கூறினான்.
- எருதைத் தலைவனுக்கும் தந்தையைப் பாங்கனுக்கும் உப்பின் எடையால் எருது வருந்தும் நிலையைக் காதல் வருத்தத்திற்கும் உள்ளுறையாக வைத்துப் பாடல் புனையப்பட்டுள்ளது.
Question 17.
முகம் முகவரியற்றுப் போனதற்கு, சுகந்தி சுப்ரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
பல முகங்களோடு முகம் காணும் போது எனது முகம் காணவில்லை. எனக்குள்ளே என்னைத் தொலைத்த பின் எனது முகம் முகவரியற்றுப் போனது இன்னும் என்னைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்.
Question 18.
மொழியின் இயல்பு வழக்குகளை கலையின் வழக்குகளாக மாற்றுபவை எவை?
Answer:
மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை.
- உவமம்
- உருவகம்
- எச்சம்
- குறிப்பு
- உள்ளுறை
- இறைச்சி
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக
Question 19.
வரியெழுத்தின் உறுப்புகள் யாவை?
Answer:
- புள்ளி
- கால்
- கொம்பு
- விலங்கு
முதலியவை வரியெழுத்தின் உறுப்புகள் ஆகும்.
Question 20.
“வெள்ளையர் நகரம்” “கருப்பர் நகரம்”- விளக்குக.
Answer:
- செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.
- கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள் வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ என அழைக்கப்பட்டது.
Question 21.
முப்பரிமாணக் கலை என்றால் என்ன?
Answer:
- திரைப்படத்தில், நடிப்பவரை முன் பின் மேல் என்று பல கோணங்களில் படப்பிடிப்புக் கருவியால் இடம் மாற்றி மாற்றிப் படம் பிடித்துத் திரையில் காட்ட முடியும்.
- திரைப்படத்தை முப்பரிமாணக் கலை என வகைப்படுத்துகிறோம்.
- ஒருவன் ஓடிவருவதைக் காட்டிவிட்டு அதைப் பார்ப்பவன் ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று
கேட்கவேண்டியதில்லை. என்னாச்சு? என்று கேட்டால் போதும். - இது காட்சிமொழியின் தன்மை. உணர்ச்சிகளைக் காண்பிக்க முகத்தை மட்டுமே காண்பித்தால் போதும்.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடை தருக.
Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
(அ) களைந்து (ஆ) வந்தனர்
Answer:
(அ) களைந்து = களை + த் (ந்) + த் + உ
களை – பகுதி
த் – சந்தி ; ந் – விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
(ஆ) வந்தனர் = வா (வந்) + த் + அன் + அர்
வா – பகுதி ; (வந்) – விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அர் – பல்பால் வினைமுற்று விகுதி
Question 23.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்பு தருக.
(அ) கருந்தடம்
(ஆ) உன்ன லிர்
Answer:
(அ) பண்புத்தொகை
(ஆ) முன்னிலைப் பன்மை வினைமுற்று
Question 24.
மரபுப்பிழை நீக்குக.
வண்டுகள் பாட குயில்கள் கத்த மயில்கள் கூவின.
Answer:
வண்டுகள் முரல் குயில்கள் கூவிட மயில்கள் அகவின.
Question 25.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
அ) நன்மொழி
(ஆ) பத்துப்பாட்டு
Answer:
(அ) நன்மொழி = நன்மை + மொழி
விதி : ஈறுபோதல்
(ஆ) பத்துப்பாட்டு = பத்து + பாட்டு
விதி : இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
Question 26.
தனித்தமிழில் எழுதுக.
விவாகத்திற்கு பந்து மித்திரர்களுடன் வருக.
Answer:
திருமணத்திற்கு உறவினர்களுடனும், நண்பர்களுடனும் வருக.
Question 27.
மயங்கொலிப் பிழையின்றி பொருள் வேறுபட ஒரே தொடரில் விடையளி.
உன் — உண்
Answer:
உணவு இடைவேளையில் காலம் தாழ்த்தாமல் உன் சாப்பாட்டைத் தவறாமல் உண்.
Question 28.
கொச்சை நீக்கிச் சரியாக எழுது.
இன்னக்கி சாயுங்காலம் தங்கச்சி வரும்.
Answer:
இன்று மாலை தங்கை வருவாள்.
Question 29.
தனித்தமிழில் எழுதுக.
போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ளைண்ட் கொடு.
Answer:
காவல் நிலையம் சென்று புகார் கொடு.
Question 30.
விடைக்கேற்ற வினா எழுதுக.
பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பாடப்பகுதியின் உட்பகுதியிலிருந்துதான் வருகின்றன.
Answer:
பொதுத்தேர்வுக்கான வினாக்கள் பாடப்பகுதியின் எப்பகுதியிலிருந்து வருகின்றன?
பகுதி – III
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]
பிரிவு – 1
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.
Question 31.
‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answer:
- செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் – செம்மையான சூரியன் அதாவது மாலைப் பொழுதில் தோன்றும் சிவப்பு நிற சூரியன் மலைகளின் மேடு அதாவது மலையின் உச்சியில் சென்று மறைந்து போவான்.
- செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் – செம்மையான நிறம் கொண்ட பூக்கள் போல அத்தருணத்தில் வானம் எல்லாம் சிவப்பு வண்ணமாய் அந்த மாலைப் பொழுதில் நிறம் மாறி நிற்கும்.
Question 32.
சுரதா குறிப்பு வரைக.
Answer:
- உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்.
- அப்பெயரைப் பாரதிதாசன்மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
- முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
- தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
- இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
Question 33.
சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
Answer:
“களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று”
கள்ளுண்டு மயங்கியவனிடம் நல்லன சொல்லித் திருத்த முயல்வது, நீரில் மூழ்கிய ஒருவரைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
“சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்”
ஒருவருக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.
Question 34.
தலைக்கோல் என்றால் என்ன? அவற்றின் சிறப்பு யாது?
Answer:
- அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல் மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர்.
- தலைக்கோல் என்பது, பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது.
- அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர்.
- வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர்.
- அத்தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.
- மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகப்படாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர்.
- முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும்.
- அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில்
வைப்பான். - மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.
Question 35.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள் குறித்து எழுதுக.
Answer:
- ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தொடக்கப் பள்ளியில் 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். பாடம் கற்பிக்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவர் வளாகம் சாராத ஆய்வாளராகத் தம்மை உருவாக்கிக் கொண்டார்.
- கட்டுரையோ, நூலோ எழுதும் முன் தரவுகளைச் சேகரித்துத் தமது ஆய்வுக்கு ஏற்றதை ஒப்பிட்டு ஐயமிருப்பின் மற்றவர்களைக் கேட்டுத் தெளிந்த பிறகே வெளியிடுவார்.
- மயிலை சீனி. ஒரு தமிழ்த் தேனீ. அறிவின் வாயில்களை நோக்கியே அவர் கால்கள் நடந்தன. நூலகங்களே அவரது தாயகங்களாயின. அறிவை விரிவு செய்து அல்லும் பகலும் ஆய்வில் மூழ்கிக் கருத்து முத்துகளைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார்.
- புதிய செய்தி தருதல், புது விளக்கமளித்தல், இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டுதல், தவறுகளை மறுத்து உண்மையை எடுத்துரைத்தல் என்பவற்றை ஆய்வு அணுகு முறைகளாகக் கொண்டார்.
மயிலை சீனி. வேங்கடசாமியின் படைப்புகள்:
- விபுலானந்த அடிகள்…. இதழ்களில் வெளியாகின.
- பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
- தமிழ்நாட்டு வரலாறு
- சாசனச் செய்யுள் மஞ்சரி
- மறைந்து போன தமிழ் நூல்கள்
Question 36.
பெருங்காப்பியத்தில் இடம் பெற வேண்டிய சிறப்புகள் யாவை?
Answer:
- வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம்.
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் பெருங்காப்பியத்தின் திரண்ட பொருளாக அமைந்திருக்க வேண்டும். எனினும் இவற்றுள் பாவிகத்திற்கு ஏற்றவண்ணம் ஒன்றும் பலவும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.
- தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
- மலை (1), கடல் (2), நாடு (3), நகர் (4), சிறுபொழுது (5-10), பெரும்பொழுது (11-16), கதிரவன் தோற்றம் (17), சந்திரனின் தோற்றம் (18) ஆகிய பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்.
- திருமணம் புரிதல், மக்களைப் பெற்றெடுத்தல், முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- அமைச்சர்களுடன் கலந்துரையாடல், தூது செல்லல், போர்ப் புரிய படைகள் அணிவகுத்தல், போர்நிகழ்ச்சி, வெற்றி பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெறுதல் வேண்டும்.
- சந்தி எனப்படும் கதைப்போக்கு (தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
- அமைப்பு முறையில் பெருங்காப்பிய உட்பிரிவுகளுள், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
- எண்வகைச் சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்புகளும் கேட்போர் விரும்பும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Question 37.
மாணக்கர் அக்காலத்தில் சுவடிகளை எவ்வாறு அமைத்தனர்?
Answer:
- இளம்பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோர்த்துத் தருவார்.
- ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்ற பிள்ளைகள் தாங்களே செய்து
கொள்ளுவார்கள். பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம். - மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள். மரச்சட்டங்களையும் அமைப்பார்கள்.
- செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு.
- இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் – செருகிக் கட்டுவார்கள். அதற்கு நாராசம் என்று பெயர்.
- சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் டையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.
- இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.
Question 38.
தென்னிந்திய சினிமாத் தொழில் வளர காரணமானவர் யாவர்?
Answer:
- படங்காட்டுதல் மூலம்தான் முதன்முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
- மனைவியின் வைரமாலையை விற்று சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்கார் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப்படங்களையும் வாங்கினார். • திருச்சியில் ஒரு கூடாரத்தில் படங்காட்ட ஆரம்பித்த அவர், பின்னர் திருவனந்தபுரம், மதுரை
நகர்களில் முகாமிட்டு, மதராசுக்கு வந்து காட்சிகள் நடத்தினார். - அங்கிருந்து வடக்கே சென்று பெஷாவர், லாகூர் பின்னர் லக்னோ நகரங்களில் படக்காட்சிகள் நடத்திவிட்டு 1909 இல் மதராஸ் திரும்பினார்.
- அங்கே எஸ்பிளனேட்டில் (இன்றைய பாரிஸ் அருகே) கூடாரம் போட்டுச் சலனப்படங்களைத் திரையிட்டார்.
- சென்னையிலிருக்கும் போது சினிமாத்தொழிலை இங்கு நிறுவ ஒரு முக்கியமான அடியெடுத்து வைத்தார்.
- புரொஜக்டர்களை இறக்குமதி செய்து விற்க ஆரம்பித்தார். இதனால் புதிய திரையரங்குகள் வர ஏதுவாயிற்று.
பிரிவு – 3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக
Question 39.
குறிஞ்சித்திணை அல்லது நெய்தல்திணையை விவரி.
Answer:
குறிஞ்சித்திணை :
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை.
முதற்பொருள் :
நீலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்
பெரும்பொழுது – கூதிர், முன்பனி
கருப்பொருள்:
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
பூ – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி
உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
சான்று:
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே
விளக்கம்:
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.
(அல்லது)
நெய்தல் திணை:
Answer:
முதற்பொருள்
நிலம் – கடலும், கடல் சார்ந்த இடமும்.
பொழுது – சிறுபொழுது – எற்பாடு
பெரும்பொழுது – முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில். கூதிர்
கருப்பொருள்
தெய்வம் – வருணன்
மக்கள் – பரதவர், பரத்தியர், நுளையர்
பறவை – நீர்க்காக்கை
விலங்கு – சுறா
ஊர் – பட்டினம், பாக்கம்
நீர் – உவர்நீர்க்கேணி, உவர்க்கழி
உணவு – மீனும், உப்பும் விற்றால் பெறும் பொருள்
தொழில் – மீன் பிடித்தல், உப்பு விற்றல்
உரிப்பொருள்
‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’
சான்று:
இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
என்ற நற்றிணைப் பாடல் நெய்தல் திணைக்குச் சான்றாகும்.
துறை:
இது புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.
விளக்கம்:
பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்தித்துச் செல்கின்றான். அப்பொழுது தோழி தலைவனை நோக்கி “இவ்வாறு செல்வாயானால் மீண்டும் நீ வருவதற்குள் தலைவி இறந்து விடுவாள். ஆதலால் அதற்கு ஏற்றது செய்”, என வரைவு (மணஞ்செய்து கொள்வது) தோன்றக்
கூறுவது வரைவு கடாதலாகும்.
Question 40.
உருவக அணி அல்லது பிறிது மொழிதல் அணியை சான்றுடன் விவரி.
Answer:
உருவக அணி:
அணி விளக்கம்:
உவமானமும், உவமேயமும் வேறு வேறு பொருள் எனத் தோன்றாமல் ஒன்றுபோல் காட்டி, உவமானத்தின் தன்மை முழுவதும் உவமேயத்தில் மறைந்து நிற்கும்படிக் கூறுவது ‘உருவக அணி’ எனப்படும்.
(எ.கா.) முகத்தாமரை
விளக்கம்
முகமானது தாமரையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் கூறும் பொருள் ‘உவமேயம்’ எனப்படும். ஒப்புமையாகக் காட்டும் பொருள் ‘உவமை’ எனப்படும்.
(அல்லது)
பிறிது மொழிதல் அணி:
Answer:
அணி விளக்கம் :
புலவர் தாம் கூறக் கருதியதை வெளிப்படையாகக் கூறாமல், அதனோடு தொடர்புடைய வேறொன்றின் மீது ஏற்றிக் கூறி, அதன்மூலம் தாம் கருதியதைப் பெற வைத்தல் ‘பிறிது மொழிதல் அணி’யாகும்.
(எ.கா.) பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
விளக்கம்:
மயிலிறகு மென்மையானது என்றாலும், அதனையே அளவுக்கு மேல் வண்டியில் ஏற்றினால், வண்டியானது பளு தாங்காமல் அச்சு முறிந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். ஆனால், வள்ளுவர் இக்கருத்தை உணர்த்த இந்தக் குறளைக் கூறவில்லை.
எதிரிகள் வலிமையற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்து, வலிமையுடைய வனைத் தாக்கினால் அவன் நிலைகுலைந்து போவான். இக்கருத்தை வலியுறுத்தவே வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார். எனவே, இது ‘பிறிது மொழிதல் அணி’ ஆகும். (பிறிது – வேறொன்று; மொழிதல் – கூறுதல்))
Question 41.
கீழ்க்காணும் பாடலைப் படித்தறிந்து ஏதேனும் 5 நயங்களை மட்டும் எழுதுக.
Answer:
தாயென அன்பு செய்து
தந்தைபோல் பரிந்து, சொந்தச்
சேயென அணைத்துப் பேசி
செவ்விய அறிவு கூறி
தூயநன் னடத்தை கற்கத்
துணையென நடந்து காட்டும்
ஆயநற் குணமுள் ளோனே
ஆசானென் றழைக்கத் தக்கோன். (- நாமக்கல் கவிஞர்)
ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் : வெ. இராமலிங்கம்
பிறப்பு : 29 அக்டோபர், 1888
ஊர் : மோகனூர் – நாமக்கல் மாவட்டம்
சிறப்பு பெயர் : காந்தியக் கவிஞர்
படைப்பு : மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள்
இறப்பு : 24 ஆகஸ்டு 1972)
திரண்ட கருத்து:
ஒரு நல்ல ஆசிரியன் என்பவன் தாயைப் போல அன்பு செய்தும், தந்தையைப் போல பரிவுடனும், பெற்ற குழந்தையைப் போல அணைத்து பேசியும் நல்ல அறிவுரைகளை கூறுதல் வேண்டும். தூய நன்னடத்தைகளைக் கற்க துணையைப் போல நடந்துகாட்ட வேண்டும். இவ்வகையான தூய்மையான நல்ல குணங்கள் உள்ளவனே நல்ல ஆசான் ஆவார்.
மையக் கருத்து:
ஒரு நல்ல ஆசான் தாய், தந்தை, குழந்தை, துணையை போல இருக்க வேண்டும் என கூறுகிறார்.
மோனை:
மோனை – சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது
அன்பு – அறிவு
ஆயநற்குணம் – ஆசானெள்
எதுகை:
அடிதோறும் இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை.
தாயென – சேசெயன
தூயறள் – ஆயநள்
அணி:
உவமையணி
Question 42.
தமிழாக்கம் தருக.
1. Walls have ears.
2. Wealth is best known by want.
3. While in rome, be a roman.
4. Think every – body alike.
Answer:
1. பகலில் பக்கம் பார்த்துப் பேசு.
2. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
3. ஊருடன் ஒத்துவாழ்.
4 தன்னைப்போலப் பிறரை நினை.
Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 8 வரிகளில் கவிதை புனைக.
Answer:
வான்மழை :
வரவேற்பேன் வரவேற்பேன்
வான்மழையே நீ வந்துவிடு
உன்னை அழைக்கத்தான்
உவந்துநான் மரம் வளர்த்தேன்
மாமயில்கள் அகவி ஆடுவதும்
மாமழை உன்னை வரவேற்கத்தான்
வாடிடும் பயிர்கள் காக்க
வாஞ்சையுடன் நீ வருவாயே!
பகுதி – IV
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக.[3 x 6 = 18]
Question 44.
(அ) நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:
- “ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!” என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஜப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
- பருவ மாற்றங்களால் உயிரனங்களின் இயல்பு வாழ்க்கை , மாற்றம் பெறுகிறது.
- முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்தும் மாற்றத்தைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.
- தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
- தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
- தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
- அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
- பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
- விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
- மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன.
- பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு என மழைக்காலத்தை வருணிக்கிறார் நக்கீரர்.
(அல்லது)
(ஆ) நாட்டியக் கலைஞருக்குத் தமிழர் உரிய சிறப்பு அளித்தனர் என்பதைச் சிலப்பதிகாரப் பாடற்பகுதி கொண்டு நிறுவுக.
Answer:
முன்னுரை:
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது. புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
மாதவியின் நாட்டியப் பயிற்சி:
மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள். ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள், (வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள் அவளுடன் ஆடல், ஆசான், இசை ஆசான், கவிஞன், தண்ணுமை ஆசான், குழல் ஆசான், யாழ் ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்.)
நாட்டிய அரங்கின் அமைப்பு:
திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைந்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தை அமைத்தனர்.
தலைக்கோல் :
அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்குத் தலைக்கோல் அளித்துச் சிறப்பிப்பர். தலைக்கோல் என்பது. பெரும்புகழ் கொண்ட பகை மன்னனுடன் நிகழ்த்திய போரில், தோற்றுப் புறங்காட்டிய அவனிடமிருந்து பறிக்கப்பட்ட அழகுமிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது. அக்காம்பின் கணுக்கள் முழுவதும் நவமணிகளை இழைத்து அக்கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சாம்பூந்தம் எனும் பொன் தகட்டை வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுற்றிக்கட்டி அதனை ஒரு கோலாக்குவர். வெண்கொற்றக் குடையுடன் உலகாளும் மன்னனின் அரண்மனையில் அதனை வைத்து இந்திரன் மகன் சயந்தன் என அக்கோலை நினைத்து மந்திர விதியாலே வழிபாடு செய்வர். அத்தலைக்கோலைப் புண்ணிய நதிகளிலிருந்து பொற்குடங்களில் முகந்து வந்த நன்னீரால் நீராட்டுவர்.
மாலைகளை அணிவித்துப் பொருத்தமான ஒரு நல்ல நாளிலே பொன்னாலான பூணினையும் முகபடாத்தையும் கொண்டிருக்கிற பட்டத்து யானையின் கையில் வாழ்த்தித் தருவர். முரசுகள் முழங்கப் பல்வேறு வாத்தியங்கள் ஒலிக்க அரசரும் அவரின் ஐம்பெருங்குழுவினரும் சூழ்ந்து வரப்பட்டத்து யானை, தேரை வலம் வந்து அதன் மேல் உள்ள கவிஞனிடம் அத்தலைக்கோலைக் கொடுக்கும். அனைவரும் ஊர்வலமாக அரங்கிற்கு வந்தபின், அத்தலைக்கோலைக் கவிஞன் ஆடலரங்கில் வைப்பான். மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது.
மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்:
பொன்னால் செய்யப்பட்ட ஒரு பூங்கொடி வந்து நடனமாடியது போல மாதவி அரங்கில் தோன்றி நாட்டிய நூலில் சொல்லப்பட்ட முறைமை தவறாது பாவம், அபிநயம் இவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து அனைவரும் கண்டுகளிக்கும்படி அழகுற ஆடினாள். மாதவி கூத்துக்கு உரிய இயல்பினிலிருந்து சற்றும் வழுவாது ஆடினாள். ஆடலைக் கண்டு அகமகிழ்ந்த மன்னனிடமிருந்து ‘தலைக்கோலி’ என்னும் பட்டமும் பெற்றாள். அரங்கேற்றம் செய்யும் நாடகக் கணிகையர்க்குப் ‘பரிசு இவ்வளவு ‘ என நூல் விதித்த முறைப்படி ‘ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன் மாலையை’ மன்னனிடமிருந்து பரிசாகப் பெற்றாள்.
மாதவியின் நாட்டியம்:
அரசன் முதலானோர் யாவரும் தத்தம் தகுதிக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். அதனருகே இசைக் கருவிகளை வாசிப்போர், நிற்க வேண்டிய முறைப்படி அவரவர்க்கு உரிய இடத்தில் நின்றனர். அரங்கேற்றம் செய்ய வேண்டிய நாடகக் கணிகையாகிய மாதவி அரங்கில் வலக்காலை முன்வைத்து ஏறி, பொருமுக எழினிக்கு நிலையிடனான வலத்தூண் அருகே போய் நிற்க வேண்டியது மரபு என்பதால் அங்குப் போய் நின்றாள். ஆடலில் தேர்ச்சிபெற்று அரங்கேறிய தோரியமகளிரும் தொன்றுதொட்டு வரும் முறைப்படி ஒருமுக எழினிக்கு நிலையிடனான இடப்பக்கத்தூணின் அருகே போய் நின்றனர்.
முடிவுரை:
தமிழர்கள் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தன் வெற்றியை போற்றி தலைக்கோலை பாதுகாத்தனர். அத்தகைய தலைக்கோலையே நாட்டியத்திற்காக பரிசு வழங்குகையில் அவர்கள்
நாட்டியக் கலைக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.
Question 45.
(அ) மயிலையார் ஓர் “ஆராய்ச்சிப் பேரறிஞர்” என்னும் கூற்றினைச் சான்றுகளுடன்
கட்டுரைக்க.
Answer:
முன்னுரை:
- ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய கடந்தகால வரலாற்றை அறிந்திருந்தால் மட்டுமே ‘ எதிர்கால இலக்குகளை அடைய முடியும்.
- அத்தகைய இன வரலாற்றை இலக்கியம், தொல்லியல், கல்வெட்டு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவுகளைத் தேடி எழுதிய ஆளுமைகளில் முக்கியமானவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
- இதழ் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியபடியே எழுதி முடித்த புத்தகங்களே, தமிழர் தம் பழம்பெருமையை உணர, உதவும் புதையலாக விளங்குகிறது.
தொடக்ககால ஆய்வுகள்:
- 1934 இல் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ச.த. சற்குணர், கிறித்துவமும் தமிழும் என்ற பொருள் குறித்து உரையாற்றினார்.
- அவ்வுரையைக் கேட்டுப் பெற்ற ஆர்வத்தினால் ‘கிறித்துவமும் தமிழும்’ என்னும் நூலை மயிலையார் எழுதினார். இதுவே அவருடைய முதல் நூலாகும்.
- தமிழின் தொல் இலக்கியம், தொல் கலை, தொல்லெழுத்து ஆகியவற்றில் கொண்ட ஈடுபாடு
காரணமாக, ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களை அவர் இயற்றினார். - சமயம், மானுடவியல், தமிழக வரலாறு, தொல்பொருள் ஆய்வு, கலை வரலாறு, மொழியாய்வு முதலான பல துறைகளிலும் இவர் கவனம் செலுத்தினார்.
- குறிப்பாக, கல்வெட்டு ஆய்வில் இவருக்குப் பயிற்சி அதிகம். தமிழ் எழுத்தியலின் வளர்ச்சியை நன்குணர்ந்தவர். வட்டெழுத்து, கோலெழுத்து. தமிழ் பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்த காரணத்தால் சாசனங்களை அவரால் எளிதாக வாசிக்க முடிந்தது.
- வரலாறு, இலக்கியம், கலையியல், சமயம் எனப் பல துறைகளிலும் நூல்களை எழுதியிருப்பது வேங்கடசாமியின் பன்முக அறிவை விளக்குகிறது.
வரலாற்று ஆய்வு :
- மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகியோர் குறித்த நூல்களைத் தொடர்ந்து மூன்றாம்
நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனைப் பற்றியும் அவர் எழுதினார். - தமிழில் அம்மன்னனைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமையைப் பெற்றது.
- சங்க கால மூவேந்தர்கள், கொங்குநாட்டு மன்னர்கள், துளு நாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
- சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தைக் களப்பிரர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இக்காலம் தமிழர்களின் வரலாற்றில் இருண்ட காலம் என்று மரபுவழிப்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர்.
- இம்மன்னர்கள் குறித்த ஆய்வை வேங்கடசாமி விரிவாக ஆராய்ந்து களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்தைக் ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூல் மூலம் வெளிப்படுத்தினார்.
கலையியல் ஆய்வு:
- கலையியல் சார்ந்து தமிழில் வெளியான பல நூல்களுக்கும் வேங்கடசாமியே வழிகாட்டியாக விளங்கினார்.
- தமிழரது கலைத்திறனை எடுத்தோதும் ‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்னும் நூல், கவின் கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல் நூல் ஆகும்.
- இந்நூல் தமிழக அரசின் முதற்பரிசைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம். நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியவை கலை பற்றிய இவருடைய பிற நூல்கள் ஆகும். • தமது நூல்களின் படங்களைத் தானே வரைந்து வெளியிட்டது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும்.
கல்வெட்டு ஆய்வுகள்:
- சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வணிகம், களப்பிரர் ஆட்சியில் தமிழகம், கொங்கு நாட்டு வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் (அரசியல்) ஆகிய நூல்களையும் எழுதினார்.
- ஆய்வுலகில் மயிலை சீனி. வேங்கடசாமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கூற வேண்டுமானால் தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்ததைக் குறிப்பிடலாம். தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூல் இவருடைய மீட்டுருவாக்க முயற்சிக்குச் சரியான சான்றாகும்.
- தமிழியலுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் பணியை இவர் மேற்கொண்டார். இப்பணியின் விளைவாக, சாசனச் செய்யுள் மஞ்சரி, மறைந்துபோன தமிழ்நூல்கள் ஆகிய நூல்களை எழுதினார்.
பன்மொழிப் புலமை:
- தமிழ் ஆய்வு மரபில், சொல் ஆய்வுகளை மேற்கொள்ளாத ஆய்வாளர் இல்லை. நீண்ட வரலாறு கொண்ட மொழியின் சொற்களில் இவ்வகையான ஆய்வுக்குரிய ஏதுக்கள் மிகுதியாகும். வேங்கடசாமி தொடர்ச்சியாக இத்தகைய சொல்லாய்வுப் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இதழில் அவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
- மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியுள்ளார்.
- தமிழ்ப் பண்பாட்டிலும் தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட மயிலை சீனி. அவர்கள் தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை நிறுவுவதில் உறுதியான பார்வை கொண்டவர்.
ஆராய்ச்சிப் பேரறிஞர்:
- மயிலை சீனியாரால் பல ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்முதலாக வழங்கப்பட்டவை. இவரது ஆய்வுகள் அறிஞருக்கு மட்டுமன்றிப் பொதுமக்களுக்கும் அறிவு விருந்தோம்பியவை.
- பல ஆய்வுகள் கிளைவிடுவதற்கு அடிமரமாக இருந்தவை. இவரது ஆய்வுகள், வேண்டாத நூலிது என்றோ நூலில் வேண்டாத பகுதி என்றோ ஒதுக்க முடியாத வகையில் இவரது எழுத்தாளுமை திகழ்ந்தது.
முடிவுரை:
- தமிழக வரலாற்றுக் கழகத்திலும் தமிழகப் புலவர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பெருந்தொண்டாற்றிய வேங்கடசாமிக்கு 1962இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் பாராட்டிக் கேடயம் வழங்கியது.
- மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற விருதினை அளித்தது.
- தமது ஓயாத தேடலினாலும் கடுமையான உழைப்பாலும் அரிய ஆய்வு முடிவுகளைக் கொணர்ந்த இம்மாமனிதருக்கு அறிஞர்கள் கூடிச் சென்னை கோகலே மண்டபத்தில் மணிவிழா எடுத்து ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
(அல்லது)
(ஆ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு
கட்டமைக்கப்படுகிறது – எவ்வாறு? விளக்குக.
Answer:
- குடும்பம் எனும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. குடும்பம் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்ற அமைப்புவரை விரிவு பெறுகிறது.
- குடும்பமே மனித சமூகத்தின் அடிப்படை அலகாக உள்ளது. வாழுங்காலம் முழுவதும் தொடர்ந்து வேறு எந்த நிறுவனமும் இந்த அளவுக்கு மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைச் செய்ததில்லை.
குடும்பம்:
குடும்பம் எனும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே, குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே செயல்படுகின்றன – நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல, இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை . குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.
வாழிடம்:
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் போக்கினைக் காண முடிகிறது. இன்னும் சில இடங்களில் தற்காலிகத் தங்குமிடம் புக்கில் எனவும், திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ எனவும் வழங்கப்பெற்றுள்ளன.
மணந்தகம்:
குடும்பமும் உயிரிகளைப் போன்றே தோன்றுகிறது; வளர்கிறது, பல கட்டங்களைக் கடக்கிறது. அதன் வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது. இத்தகைய நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் திருமணமே. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ‘மணந்தகம்’ எனப்படுகிறது. முதல் குழந்தை பிறக்கும்வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கிறது. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையாக இது அமைகிறது.
தாய்வழிக் குடும்பம்:
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது. பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சிறுவர்தாயே பேரிற் பெண்டே
செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
முளரிமருங்கின் முதியோள் சிறுவன்
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
முதலான தொடர்களில் ‘ இவளது மகன்’ என்றே கூறப்பட்டது. இவனது மகன் எனக் கூறப்படவில்லை என்பது நோக்கத்தக்கது. இவை அனைத்தும் சங்ககாலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் நிலையைக் காட்டுகின்றன.
சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் தாய முறை இருந்துள்ளது. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.
தந்தைவழிக் குடும்பம்:
மனித குலத்தில் ஆதியில் தோன்றி வளர்ந்த தாய்வழி முறையானது தமிழர்களிடம் இருந்ததைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முடிந்தாலும், சங்க காலத்திலேயே ஆண் மையச் சமூக முறை வலுவாக வேர் ஊன்றிப் பரவலாகி விட்டதையும் காணமுடிகிறது.
ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப்பின் தன் கணவனுடைய தந்தையகத்தில் வாழ வேண்டும். மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் சிலம்புகழி நோன்பு செய்திருக்கிறாள்.
தனிக்குடும்பம் :
தனிக்குடும்பம் தோன்றுவதற்கான தொடக்கநிலைக் குடும்பங்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் மிகுதியாகப் பேசியிருக்கின்றன. இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளை ஐங்குறுநூறு தெளிவுபடுத்துகிறது. “மறியிடைப் படுத்த மான்பிணை போல்” மகனை நடுவணாகக்கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்ந்திருக்கின்றனர். தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் மிகவும் நெருக்கமானது என்பதால் இது தொடக்கநிலை / எளிய நெருக்கமான குடும்பம் எனப்படும்.
விரிந்த குடும்பம்:
சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவுபெற்று இவர்களுடன் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் “விரிந்த குடும்ப முறையையும் காண முடிகிறது. கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்த்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
இவ்வாறு குடும்பம் என்னும் சிறிய அமைப்பு மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பாக கட்டமைக்கப்படுகிறது.
Question 46.
(அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின்
பண்பு நலத்தை விவரிக்க.
Answer:
மருதன் கண்ட காட்சி:
“ஐப்பசி மாதம் அடைமழை காலம்” கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று விரிந்து கிடந்த வயல்வெளிகள். வயல்வெளியெங்கும் நடவு முடிந்து ஒரு வாரம் பத்து நாளான பச்சை பிடிக்கத் தொடங்கியிருந்த இளம்பயிர். நான்கு நாள் அடைமழையில் எல்லா வாய்க்கால்களும் பொங்கி வழிந்து வரப்பு எது, வயல் எது என்று அடையாளம் தெரியாமல் இப்பொழுதோ சற்றுப் பொறுத்தோ நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில் இருந்தது.
மருதனின் சிந்தனைகள்:
எந்த மழையின் உதவியில் நட்டார்களோ, அதே மழையின் ‘அபரிமித அன்பினால்’ இப்போது பயிர் தெப்பலாடுகிறது. ஒரு நாள் மூழ்கினால் போதும். முழுவதும் அழுகிவிடும். மறுபடி புதிதாக நாற்றுவிட்டு…. புதிய சாகுபடிதான். அதற்கு யாரால் முடியும்…? இதற்கே அங்கே வாங்கி, இங்கே பிடுங்கி என்று ஏகப்பட்ட அல்லாடல்கள். மறுபடியும் என்றால் …. தரிசுதான். சோற்றுக்கு லாட்டரிதான். வேறு என்ன செய்ய? என்ன செய்யலாம் என்று மருதனுக்கும் ஆயிரம் யோசனைகள்.
மருதனுக்கு தோன்றிய யோசனை:
கரைவழியே நடந்தான். உபரித் தண்ணீர் வடிய வேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகின் கீழ்க்குமிழி மட்டுமல்ல. ஊரைச்சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்றுமைல் நீள வடிவாய்க்கால் முழுவதுமே சுவர் வைத்துத் தடுத்ததைப் போல் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளின் அசுரத்தனமான ஆக்கிரமிப்பு. பயிர்கள் மூழ்காமல் மொத்தத் கிராமமும் தப்பித்துக்கொள்ள வழி கண்டுபிடித்து விட்ட சந்தோஷம் மருதனுக்கு. இந்த பேய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுவதும் வடிந்துவிடும்.
மருதனுக்கு ஏற்பட்ட சந்தேகம்:
சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லேசான காரியமா? இந்த மலைப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனைக்குப் பிறகு வழி தெரிந்தது. உற்சாகமாக நடக்கத் தொடங்கினான்.
மருதன் மாரியப்பனிடம் கூறினான்:
மருதனைக் கண்ட மாரியப்பன் ஊர்க்காரங்க எல்லோரும் ஒண்ணு சேந்தோம்னு வச்சுக்க. ஆளுக்கொரு செடின்னாகூட ஒரே நாள்லே வாய்க்காலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும். இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்தான். பார்த்ததோடு சரி. காதில் கேட்காதவாறு மாரி அவன் வேலையைச் செய்ய ஆரம்பித்தான் பொறுமையிழந்த மருதன் “ஏண்டா மாரி, நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைமரத்துக்கிட்டேயில்லை.” “தெரியுது … ஏதாவது நடக்கிற காரியமா இருந்தா பதில் சொல்லலாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற …. நானென்ன சொல்ல முடியும்?” “ச்சே… நீயெல்லாம் ஒரு மனுஷன் ….. முதமுத உங்கட்ட வந்து கேட்டேன் பாரு… என்னைச் சொல்லணும்..” கோபம் மாறாமல் கீழே இறங்கினான் மருதன்.
மருதன் காளியப்பனின் உதவியை நாடினான்:
வடக்கேயிருக்கும் எட்டூரு தண்ணியும் நம்மூரு வழியாத்தானே வடிஞ்சாகனும். மேற்கொண்டு மழை பேயணும் கூட அவசியமில்லை…… ராத்திரிக்குள்ளே எல்லாத் தண்ணியும் இங்கே வந்திறங்கிடுச்சின்னா…. அவ்வளவுதான் … இப்பவே எல்லாப் பயிரும் தோகையாடுது. எல்லாமே அப்புறம் தண்ணிக்குள்ளதான். ராத்திரி நம்ம ஊர்க்காரர்களை ஒண்ணு கூட்டி ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா போதும். கிழவரின் புருவம் ஏறி இறங்கியது. ஏன்டா மருதா … உனக்கு விவரம் தெரிஞ்சு நம்ப ஊரு பயலுவ எந்த நல்ல காரியத்துக்காகவாவது ஒண்ணு கூடியிருக்கானுவளா? மூலைக்கு ஒருத்தனா முறுக்கிக்கிட்டுல்லே போவானுங்க.
சொல்ற விதத்திலே சொன்னா எல்லாருமே கேப்பாங்க …. அதிலும் உங்க சொல்லுக்க மதிப்பு ஜாஸ்தி. யோசிக்காதீங்க பெரியப்பா …. ஒருநாள் தாமதிச்சாலும் ஊரே பாழாப் போயிடும்…… மருதனின் கவலையும், பதைப்பும் கிழவரை என்னவோ செய்தது. இருந்தாலும் கண்மூடி யோசித்தார். நாளைக்குக் காலையிலேயே பலபலன்னு விடியறப்ப வானமா தேவியிலே கட்டிக் கொடுத்திருக்கிற எம்மக வீட்லே இருந்தாகணும். குடும்பத்தோட வில் வண்டியிலே போறோம். அங்கே பேத்திக்குத் தலை சுத்துறாங்க திரும்ப வர மூணு நாளாகும். கிழவரின் சாதுரியம் மருதனுக்குப் புரிந்துவிட்டது.
மருதன் பட்டதாரி பிரேம்குமாரை சந்தித்தல் :
பிரேம்குமார் கிராமத்தின் முதல் பட்டதாரி. “நாகூர்பிச்சை” என்று அப்பா, அம்மா வைத்த பெயரை ”பிரேம்குமார்” என்று மாற்றி வைத்துக்கொண்டு “மன்றம் ” அது இது வென்று என்னவென்னவோ சதா சர்வகாலமும் செய்து கொண்டிருப்பவன். நாம நினைக்கிற காரியத்துக்கு இவன்தான் பொருத்தமானவன். முகம் மலர பிரேம்குமாரை வழி மறித்தான். “என்னண்ணே …” சிரித்தபடி பிரேம்குமார். கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் மருதன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி, பிரேமிடமிருந்து சட்டென்று எந்தப் பதிலும் வரவில்லை. சிறிது நேர யோசிப்புக்குப் பிறகு மருதனை ஏறிட்டான்.
மருதண்ணே… நீங்க சொல்ற வேலையைச் செய்றதுக்குன்னே பிடபின்யூ டின்னு கவர்மெண்ட்லே ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. நாளைக் காலையிலே அவங்களைப் பார்த்து ஒரு ‘பெட்டிஷன்’ கொடுத்தீங்கன்னா செஞ்சுட்டுப் போறாங்க என்று கூறிவிட்டு மருதனின் பதிலை எதிர்பார்க்காமல் அவ்ன் போய்க்கொண்டே இருந்தான்.
மருதனின் புலம்பல்:
மருதனால் சும்மா இருக்க முடியவில்லை. ஒருத்தர் பாக்கி இல்லாமல் ஊர்க்காரர்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பினான். அத்தனை பேரும் அவன் சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். ஆனால் அதென்ன அதிசயமோ தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. அதுவும் தள்ளிப்போட முடியாத அவசர வேலை.
மருதன் தன் மனைவி அல்லியிடம் கூறுதல்.
தன் மனைவி அல்லியிடம் மருதன் நடந்ததைக் கூறினான். அதனைக் கேட்ட அல்லி இந்த ஊர்ல இருக்கிற மொத்தம் அறுபது வேலி நிலத்திலே நமக்குன்னு ஒரு “சக்கரைக்குழி” நிலம் கூட இல்லே. எந்த நிலம் எப்படிப்போனா நமக்கென்ன… நமக்குன்னு சொந்தம் கொண்டாட இருக்கிறது நம்ம கையும் காலும்தான். இந்த ஊரு இல்லேன்னா … இன்னொரு ஊரு …. வேலையைப் பாப்பியா ….. ஆவேசமாய்க் கொட்டி முழக்கிவிட்டு உள்ளே போனாள்.
மருதனின் முயற்சி:
தளும்புகின்ற வடி வாய்க்காலில் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியே நின்றபடி மண்டிக்கிடந்த காட்டாமணக்குச் செடிகளை “சரக் சரக்” கென்று அறுத்து மேலே எறிந்து கொண்டிருந்தான் மருதன். அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டாள் அல்லி. அவளையறியாமலேயே புடவையை வரிந்து கட்டிக்கொண்டு வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டாள். “நீ சொல்றது” நிஜம்தான் மாமா. ஊரு நல்லா இருந்தாதான் நாமளும் நல்லாயிருக்கலாம். அதுக்காக இவ்ளோ நீளமான வாய்க்காலை நீயும் நானும் மட்டுமே சுத்தம் பண்ணிட முடியுமா? ஆற்றாமையுடன் கேட்டவளைத் திரும்பிப் பார்க்காமலே பதில் தந்தான். “முதல்லே நம்மாலே முடிஞ்சதை நாம செய்வோம்…”!
மருதன் முயற்சியால் ஏற்பட்ட மாற்றம்:
மருதன் மற்றும் அல்லி செய்து கொண்டிருந்த வேலையைக் கண்டு மாரியும் வேலையில் ஈடுபட்டான். இவர்கள் மூவரையும் கண்ட காளியப்பன் வண்டியில் இருந்து இறங்கி அவரும் செய்தார். இதனை வண்டிக்காரர் மூலம் அறிந்த ஊர்மக்கள் ஒவ்வொருவரும் வந்து செய்ய ஆரம்பித்தனர். “ஊர் கூடித் தேர் இழுக்கும் போதும்“ வேர்வடத்தைப் பிடிக்கும் முதல் கரமாக இருந்தது மருதனின் கரம்.
முடிவுரை:
“ஆக்கமும் அழிவும் நம்மாலே” என்னும் பழமொழிக்கு இணங்க மருதனின் பொறுப்புணர்வால் அவனுக்கும் ஊருதிடும் நன்மை ஏற்பட்டது. மருதனின் பண்பு பாராட்டிற்கு உரியது.
(அல்லது)
(ஆ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.
எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கித் திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.
நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களை காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காகப் போராடிவரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.
கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழகக் கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு … குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.
“ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”
என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலைபேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திருப்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம்.
கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம் !
பகுதி – V
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.
Question 47.
(அ) சுரதாவின் விண்வேறு என்று துவங்கும் பாடலை எழுதுக.[1 x 4 = 4]
Answer:
விண்வேறு; விண்வெளியில் இயங்கு கின்ற
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு;
மண்வேறு; மண்ணோடு கலந்தி ருக்கும்
மணல்வேறு; பனித்துளியும் மழையும் வேறு;
புண்வேறு; வீரர்களின் விழுப்புண் வேறு;
புகழ்வேறு; செல்வாக்கு வேறு;
காணும் கண்வேறு; கல்விக்கண் வேறு; கற்றார்
கவிநடையும் உரைநடையும் வேறு வேறு. (சுரதா)
(ஆ) ‘சினம்’ என முடியும் குறள் வெண்பாவை எழுதுக.[1 x 2 = 2]
Answer:
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.( – திருவள்ளுவர்)